நாகூர் அருகே, பஸ்சில் இருந்து தவறி விழுந்த மீன் வியாபாரி சாவு
நாகூர் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த மீன் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
நாகூர்,
திருவாரூர் மாவட்டம் கீரங்குடி கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 45). மீன் வியாபாரி. இவர் மீன் வியாபாரம் செய்வதற்காக வாஞ்சூருக்கு வந்தார். மீன் வியாபாரத்தை முடித்து கொண்டு தனது ஊருக்கு செல்வதற்காக நாகூர் அருகே உள்ள வாஞ்சூர் ரவுண்டானா அருகே பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது நாகையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த பஸ்சில் ராமச்சந்திரன் ஏறினார். இதில் நிலை தடுமாறி ராமச்சந்திரன் தவறி கீழே விழுந்தார். இதில் பஸ்சின் முன்பக்க டயர் அவரது கை மேல் ஏறி இறங்கியதில், கை துண்டானது.
அப்போது வாஞ்சூர் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் மற்றும் போலீசார் ராமச்சந்திரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.