கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - நாகையில் நடந்தது
நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரித்திடலில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் கஜபதி, குமார், இணை செயலாளர் தமிழ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுரேஷ்கண்ணன் வரவேற்றார்.
மாநில துணைத்தலைவர் பிரகாஷ் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். அரிசி, பாமாயில் 100 சதவீதம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு இணையான ஊதியமும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ரேஷன்கடை ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆடியபாதம், சங்கத்தை சேர்ந்த ரமணன், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.