தூத்துக்குடி அருகே பயங்கரம்: மகளை கொன்று எரித்த தாய் கைது தற்கொலை செய்ததாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலம்
மகளை கொன்று எரித்த தாயை போலீசார் கைது செய்தனர். மகள் தீக்குளித்து தற்கொலை செய்ததாக தாய் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அருகே உள்ள மேலக்கூட்டுடன் காட்டை சேர்ந்தவர் அய்யம்பிள்ளை. இவருடைய மனைவி பார்வதி (வயது 54). இவர்களுடைய மகன் சுடலைமணி, மகள் முத்துபேச்சியம்மாள் (32). சுடலைமணி திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறார்.
முத்துபேச்சியம்மாளுக்கு கடந்த 2003-ம் ஆண்டு வர்த்தகரெட்டிப்பட்டியை சேர்ந்த நாராயணன்பிள்ளை மகன் ஆனந்தன் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நவீன், பரத் என்று 2 மகன்கள் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தன் முத்துபேச்சியம்மாளை பிரிந்து சென்று விட்டார். இதனால் முத்துபேச்சியம்மாள் தனது 2 மகன்களுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.
முத்துபேச்சியம்மாள் தனது தாய் பார்வதியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுடலைமணி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் தனது தாய் வீட்டில் கடந்த 10 நாட்களாக தங்கி இருக்கிறார். அவருடைய உடல்நலம் விசாரிப்பதற்காக உறவினர்கள் பலர் பார்வதியின் வீட்டுக்கு வந்து சென்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த முத்துபேச்சியம்மாள், நான் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது யாரும் வந்து பார்க்கவில்லை. ஆனால் தற்போது அனைவரும் வந்து நலம் விசாரித்து செல்கிறார்கள் என்று கூறி பார்வதி மற்றும் சுடலைமணியுடன் தகராறு செய்து வந்தார். இதற்கு நீ தான் காரணம், உன்னை கொலை செய்து விடுவேன் என்று பார்வதியை முத்துபேச்சியம்மாள் மிரட்டினார். நேற்று முன்தினம் மாலையிலும் தாய், மகளுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது விடிந்ததும் உன் காலை உடைக்கிறேன் என்று முத்துபேச்சியம்மாள் கூறினாராம்.
இதனால் ஆத்திரம் அடைந்த பார்வதி நேற்று அதிகாலையில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த முத்துபேச்சியம்மாளின் தலையில் அம்மிக்கல்லை போட்டதாக கூறப்படுகிறது. இதில் முத்துபேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்தார். பின்னர் மகளே தனது உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று ஊரை ஏமாற்றிவிடலாம் என எண்ணிய பார்வதி, முத்துபேச்சியம்மாளின் உடலை வீட்டுக்கு பின்பகுதிக்கு இழுத்து சென்று அங்கு எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து எரித்தார்.
இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் அந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரி பேச்சியம்மாளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
உடனே புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் முத்துபேச்சியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பார்வதியை பிடித்து விசாரணை நடத்தியதில், தாயே மகளை கொலை செய்து அதனை தீக்குளித்து தற்கொலை செய்ததாக நாடகமாட முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பார்வதியை கைது செய்தனர்.