காஷ்மீர் தாக்குதலில் பலியான சுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்

காஷ்மீர் தாக்குதலில் பலியான சுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல் கூறினார்.

Update: 2019-03-01 22:30 GMT
கயத்தாறு,

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரியைச் சேர்ந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியனும் ஒருவர். அவரது உடல் சொந்த ஊரான சவலாப்பேரியில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

வீரமரணம் அடைந்த சுப்பிரமணியனின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில், ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணிக்கு கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் இளநிலை வருவாய் அலுவலர் பணி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலையில் சவலாப்பேரிக்கு சென்று, சுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார். அவர், அங்குள்ள சுப்பிரமணியனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது சுப்பிரமணியனின் தந்தை கணபதி, தன்னுடைய மூத்த மகன் கிருஷ்ணசாமிக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

அப்போது அவருடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினோபாஜி மற்றும் பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்