மு.க.ஸ்டாலின் பதாகை கிழிப்பு: போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம் நிர்வாகி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கறம்பக்குடி அருகே மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பதாகை கிழிக்கப்பட்டதை கண்டித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தி.மு.க. நிர்வாகி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் புதுவிடுதியில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் சார்பில், வாழ்த்து பதாகை கைப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவிற்காக தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில், திரளான தி.மு.க.வினர் ரெகுநாதபுரம் புது விடுதிக்கு வந்தனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பதாகை கிழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
திட்டமிட்டு பதாகை கிழிக்கப்பட்டிருப்பதாவும், கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தி.மு.க.வினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக சென்று ரெகுநாதபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பதாகையை கிழித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். அப்போது புதுவிடுதி தி.மு.க. கிளை செயலாளர் சங்கர் (வயது52) என்பவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த அருகில் இருந்த தி.மு.க.வினர் மற்றும் போலீசார் மண்எண்ணெய் கேனை பிடுங்கி தண்ணீரை ஊற்றி தீ வைக்க விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் ரெகுநாதபுரம் பகுதியில் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.