டெண்டர் விவகாரம் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒப்பந்ததாரர்கள் வாக்குவாதம் போலீசார் குவிப்பு

டெண்டர் விவகாரம் தொடர்பாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒப்பந்ததாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-01 21:45 GMT
திருச்சி,

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் 4 கோட்டங்களிலும் தார்ச்சாலை உள்பட பல்வேறு பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டு இருந்தது. அதற்கான விண்ணப்பங்களை போடுவதற்காக பொறியாளர் பிரிவு அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டியை கடந்த 27-ந் தேதி மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துவிட்டு தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் கழிப்பறைகள் பராமரிப்பு, சாலைகள் பராமரிப்பு உள்பட பல்வேறு பணிகளுக்கு நேற்று டெண்டர் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்கு ஒப்பந்ததாரர்கள் பலர் வந்து இருந்தனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் எந்தெந்த பணிகளுக்கு டெண்டர் விடப்படுகிறது என்பது குறித்து ஒப்பந்ததாரர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே டெண்டர் விடப்படுவது ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஒப்பந்ததாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்