திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு திருநாவுக்கரசர் படம் தார்பூசி அழிப்பு
திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திருநாவுக்கரசர் படம் தார்பூசி அழிக்கப்பட்டதால் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மலைக்கோட்டை,
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் சமீபத்தில் மாற்றப்பட்டு, புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலமன்றத்தில் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் படத்துடன்கூடிய பதாகை வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும், திருச்சியில் உள்ள அலுவலக பதாகையில் அவரது உருவப்படம் வைக்கப்படாமல் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் திருநாவுக்கரசர் படத்தை மாற்றிவிட்டு அழகிரி படத்தை வைக்க வேண்டும் என்று கூறி வந்தனர். ஆனால் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்களோ கே.எஸ்.அழகிரி படம் வைக்கப்பட்டாலும், அதன் அருகே திருநாவுக்கரசர் படமும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை திருச்சி காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்த திருநாவுக்கரசர் படம் தார்பூசி அழிக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அந்த பதாகை உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டது. பின்னர் அதே இடத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி படத்துடன்கூடிய பதாகை வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் யாரோ? திருநாவுக்கரசரின் படத்தில் தார்பூசி அழித்து விட்டு தப்பி சென்று இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
கோஷ்டி பூசல் காரணமாக கட்சியினரே இத்தகைய செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு யாரும் காரணமா? என நிர்வாகிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருச்சியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரின் படம் தார்பூசி அழித்துள்ள சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.