ராமநாதபுரம் அருகே தண்ணீர் லாரியில் சிக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற அரசு ஊழியர் தலைநசுங்கி சாவு
ராமநாதபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற அரசு ஊழியர் நிலைதடுமாறி விழுந்ததில் பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி தலைநசுங்கி பலியானார்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56). இவர் ராமநாதபுரம் நில அளவை துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் இவர் இருசக்கர வாகனத்தில் பாரதிநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
திடீரென சாலையோர மணலில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது வாலாந்தரவையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த தண்ணீர் லாரி ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பலியானார். தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக த.மு.மு.க. ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக தண்ணீர் லாரி டிரைவர் பேராவூரை சேர்ந்த முனியசாமி என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, பாரதிநகர் பகுதியில் சாலையின் அருகில் அதிகளவில் விளம்பர போர்டுகள் அடிக்கடி வைக்கப்படுகிறது. மேலும் சாலையின் இருபுறமும் மணல் குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். இதுதவிர இப்பகுதியில் வாகனங்களை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசாரும் இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முதல் ரோமன் சர்ச் வரையிலான தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் அதிகஅளவில் மணல் ஆக்கிரமித்துள்ளது. இதனால் சாலை மிகவும் குறுகலாக காணப்படுகிறது. வாகனங்கள் செல்லும்போது மணல் தூசியால் பின்னால் வரும் வாகன ஓட்டுனர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும் சாலையோர மணல் குவியலில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டுனர்கள் அடிக்கடி கீழே விழுந்து விபத்துகளை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக நேற்று பாரதிநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலைதடுமாறி விழுந்ததில் ஒருவர் லாரியில் சிக்கி பலியாகி உள்ளார். எனவே உயிரிழப்புகளை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டும் போதாது, விபத்துக்கு காரணமாக அமைந்துள்ள விளம்பர போர்டுகள், சாலையோர மணல் குவியல்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.