திருப்பூரில் 500 அரங்குகளுடன் நிட்டெக் பின்னலாடை எந்திர கண்காட்சி தொடங்கியது தொழில்துறையினர் உற்சாகமாக பங்கேற்பு

திருப்பூரில் 500 அரங்குகளுடன் நிட்டெக் பின்னலாடை எந்திர கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் தொழில்துறையினர் உற்சாகமாக பங்கேற்று வருகிறார்கள்.

Update: 2019-03-01 23:00 GMT

திருப்பூர்,

ஹைடெக் இண்டர்நே‌ஷனல் டிரேடு பேர் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் சார்பில் திருப்பூர் பூண்டி ரிங் ரோட்டில் உள்ள நிட்டெக் கண்காட்சி வளாகத்தில் நிட்டெக்–2019 என்ற பெயரில், ஆசியாவின் மிகப்பெரிய பின்னலாடை எந்திர மற்றும் தொழில்நுட்ப 15–வது கண்காட்சி நேற்றுகாலை 10 மணிக்கு தொடங்கியது.

இந்த தொடக்க விழாவிற்கு ஹைடெக் இண்டர்நே‌ஷனல் டிரேடு பேர் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் தலைவர் ராயப்பன் வரவேற்று பேசினார். நிட்மா சங்க தலைவர் அகில் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். சைமா சங்க தலைவர் வைக்கிங் ஏ.சி. ஈஸ்வரன் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். கண்காட்சி கையேட்டை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் வெளியிட்டார். டெக்மா சங்க முன்னாள் தலைவர் கோவிந்தசாமி கண்காட்சி கையேட்டை பெற்றுக்கொண்டார்.

திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜன், டெக்பா சங்க தலைவர் ஸ்ரீகாந்த், சிம்கா சங்க தலைவர் விவேகானந்தன், திருப்பூர் தொழில் கூட்டமைப்பு தலைவர் அகில் எம்.எஸ்.மணி, டீமா சங்க தலைவர் முத்துரத்தினம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். இதன் பின்னர் அனைத்து தொழில்துறையினரும் ஒவ்வொரு அரங்குகளாக சென்று பார்வையிட்டனர். அங்குள்ள எந்திரங்களில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பம்சங்களை கேட்டறிந்தனர்.

அரங்குகள் அமைந்திருந்தவர்கள் தொழில்துறையினரின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து தகவல்களை தெரிவித்தனர். இந்த கண்காட்சியில் 500 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி வளாகம் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா உள்பட 23 நாடுகளை சேர்ந்த பல நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த, ஏராளமான எந்திரங்களை காட்சிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக இதில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் நிட்டிங் எந்திரத்தை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த நிட்டிங் எந்திரம் தொழில்துறையினரிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. 100 ஆண்டுகள் பழமையான இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த எந்திரத்தில் ஒரு நாளில் ஒரு டன் துணிகள் உற்பத்தி செய்ய முடியும்.

தற்போது திருப்பூரில் உள்ள நிட்டிங் எந்திரங்கள் மூலம் அதிகபட்சம் ஒரு நாளில் 400 கிலோ வரை தான் உற்பத்தி செய்ய முடியும். இந்த எந்திரத்தை பயன்படுத்தினால் தொழில்துறையினர் தங்களது உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதன் மூலம் ஆர்டர்களும் அதிகமாக கிடைக்கும். ஆர்டர்களையும் விரைவாக கொடுக்க முடியும். இந்த எந்திரத்தின் மதிப்பு ரூ.55 லட்சம் ஆகும். இந்த நிட்டிங் எந்திரத்தை பலரும் ஆச்சரியமாக பார்வையிட்டு செல்கிறார்கள்.

தொழில்துறையினர் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் ஆடைகளை எண்ணுவதற்காகவும், அந்த ஆடையை மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் கனடாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆங்கர் எந்திரத்தை புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எந்திரமும் தொழில்துறையினரை கவர்ந்துள்ளது. கம்ப்யூட்டர் டெக்னாலஜி மூலம் இந்த எந்திரம் இயக்கப்படுகிறது. இதில் வரிசையாக ஆங்கர்கள் வழியாக பின்னலாடைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கிறது.

மற்றொரு முனையில் இருந்து ஆடைகளை பெறலாம். தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு பின்னலாடைகளை தயாரித்தார்கள் என்பதை சுலபமாக கணக்கு வைத்துக்கொள்ளலாம். ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு இந்த எந்திரம் அதிகளவு தேவைப்படும் என்பதால், ஜாப் ஒர்க் தொழில்துறையினரை இந்த எந்திரம் கவர்ந்து வருகிறது.

இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் முதல் முறையாக சாயமேற்றும் ஆடைகளை பரிசோதனை செய்வதற்காக டையிங் லேப் டெஸ்டிங் எந்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் துணிகளுக்கு சாயமேற்றப்படும் சாயம் சரியான அளவில் இருக்குமா? அதன் நிறம் சரியானதாக இருக்கிறதா? என்பதை உடனே தெரிந்துகொள்ள முடியும்.

இதற்கு முன்னர் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தான் சாய ஆலையினர் இதனை கண்டறிந்து வந்து கொண்டிருந்தார்கள். இதற்கு சிறிது கால அவகாசமும் தேவைப்பட்டது. ஆனால் இந்த டையிங் லேப் டெஸ்டிங் எந்திரத்தில் உடனே தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் நேரமும் குறையும். நிறமும், அளவும் துல்லியமாக இருக்கும். இதனை பரிசோதனை செய்ய கடந்த காலங்களில் போதிய வசதி இல்லாததால், பல துணிகள் சாயமேற்றப்பட்டு அதன் நிறம் மாறி நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு வந்துள்ளது. எனவே இந்த எந்திரம் சாய ஆலை உரிமையாளர்கள் பலரையும் கவர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

பின்னலாடை நிறுவனங்களில் பின்னலாடை நிறுவனங்களுக்கு உள்ளேயே பல்வேறு பணிகளுக்காக அனுப்பிவைக்கப்படுவது வழக்கம். நிறுவனங்களில் வரிசையாக அமர்ந்து கொண்டு ஜாப் ஒர்க் செய்வார்கள். இந்த பின்னலாடைகளை ஒருவர் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு வந்து கொண்டிருப்பார். இந்நிலையில் இதனை எளிமையாக்கும் வகையில் தானியங்கி பளு தூக்கும் எந்திரம் ஒன்றை இந்தியாவை சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த எந்திரத்தின் மீது பின்னலாடைகளை வைக்க வேண்டும். தொடர்ந்து அதில் நாம் தூரத்தை மற்றும் செல்லும் வழிகளை குறிப்பிட வேண்டும். இதன் பின்னர் நாம் குறிப்பிட்ட வழித்தடத்திலேயே அந்த எந்திரம் துணிகளுடன் சென்று வந்து கொண்டிருக்கும். இதில் 500 கிலோ முதல் 2 டன் வரை கொண்டு செல்லும் அளவிற்கு இந்த எந்திரம் பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஜாப் ஒர்க் தொழில்துறையினர் பலரை கவர்ந்துள்ளது.

இந்தியாவைவை சேர்ந்த நிறுவனம் டி–சர்ட் தயாரிக்க ஒரு எந்திரத்தை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த எந்திரத்தை பயன்படுத்துவதற்கு குறைவான தொழிலாளர்களே போதும் என்ற வகையில் அந்த எந்திரம் உள்ளது. இந்த எந்திரத்தின் மற்றொரு சிறப்பம்சம் உற்பத்தியும் அதிகரிக்கும். இறக்குமதி செய்யப்படும் எந்திரங்களை விட மிகவும் குறைவான விலையில் இந்த எந்திரம் கிடைக்கிறது. எனவே இந்த எந்திரத்தை ஏராளமானவர்கள் ஆர்வமாக பார்வையிட்டு சென்று வருகிறார்கள். இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் என பலர் அரங்குகள் அமைத்திருக்கிறார்கள்.

நேற்று தொடங்கிய கண்காட்சி வருகிற 4–ந் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சி நடைபெறும் நாட்களில் திருமுருகன்பூண்டி, திருப்பூர் மற்றும் ஈரோடு, கரூர், சேலம் பகுதிகளில் இருந்து இலவச பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய கண்காட்சியில் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் மற்றும் திருப்பூரை சேர்ந்த தொழில்துறையினர் பலர் உற்சாகமாக பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஹைடெக் இண்டர்நே‌ஷனல் டிரேடு பேர் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் சிபி சக்கரவர்த்தி, ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகி ஹரீஷ்குமார் உள்பட பலர் செய்திருந்தனர். இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 2–வது நாள் கண்காட்சி நடக்கிறது.

நிட்டெக் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் 500 அரங்குகளில் பெரும்பாலான நிறுவனங்கள் நிட்டிங் எந்திரங்களை காட்சிப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் நிட்டிங்கிற்காக பல்வேறு நவீன வடிவங்கள் மற்றும் சிறப்பம்சங்களுடன் எந்திரங்களை காட்சிப்படுத்தியுள்ளன. நிட்டிங் தொழில்துறையினர் இதனால் உற்சாகமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக கண்காட்சி அரங்குகளை அதிகளவில் நிட்டிங் எந்திரங்களே நிறைத்துள்ளன. இந்த எந்திரங்களுக்கும் அதிகளவு வரவேற்பு இருந்து வருகிறது. பலரும் உற்சாகமாக பார்வையிட்டு சென்று வருகிறார்கள். பாலியஸ்டர், காட்டன் உள்ளிட்ட நூல்களால் துணிகளை நிட்டிங் செய்வதற்கு ஏராளமான தொழில்நுட்பங்கள் இந்த எந்திரங்களில் இடம்பெற்றுள்ளன.

4 நாட்கள் நடைபெறும் நிட்டெக் கண்காட்சியில் ரூ.300 கோடிக்கு வர்த்தக விசாரணை நடைபெறும் என எதிர்பார்த்துள்ளதாக ஹைடெக் நிறுவன தலைவர் ராயப்பன் கூறினார்.

ஹைடெக் இண்டர்நே‌ஷனல் டிரேடு பேர் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் தலைவர் ராயப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திருப்பூரில் தற்போது நடைபெற்று வரும் நிட்டெக் பின்னலாடை எந்திர கண்காட்சி தொழில்துறையினருக்கு 100 சதவீதம் பயனுள்ளதாக அமையும். நிட்டிங் நிறுவனங்களை 20 நிறுவனங்கள் காட்சிப்படுத்தியுள்ளன. சாய எந்திரங்களை 15 நிறுவனங்களும், காம்பேக்டிங் எந்திரங்களை 10 நிறுவனங்கள் என பின்னலாடை தொடர்பான அனைத்து எந்திரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் திருப்பூர் தொழில்துறையினர் 4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய வடிவிலான எந்திரங்களை வாங்கி, தங்களது உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

வர்த்தகத்தை மேலும் உயர்த்திக்கொள்ள வேண்டும். கண்காட்சி நேற்று தொடங்கிய நிலையில் நாளை மறுநாள் வரை 4 நாட்களில் மொத்தம் ரூ.300 கோடிக்கு வர்த்தக விசாரணை எதிர்பார்த்துள்ளோம்.

அதற்கு மேல் வர்த்தக விசாரணை நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் வர்த்தகர்களின் வருகை இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகளவில் இருக்கும். மேலும், பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் பலர் கலந்துகொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

வருகிற 2022–ம் ஆண்டு ரூ.1 லட்சம் கோடி வர்த்தக இலக்கு அடைய நிட்டெக் எந்திர கண்காட்சி முக்கிய பங்கு வகிக்கும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறினார்.

நிட்டெக் கண்காட்சியில் கலந்துகொள்ள வந்த திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திருப்பூர் பின்னலாடை தொழில் ஜி.எஸ்.டி. அமல்படுத்தியதால் கடந்த 2 ஆண்டாக சிறிது தொய்வை சந்தித்து வந்தது. தற்போது அந்த நிலையில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த கண்காட்சி பின்னலாடை தொழிலை வளர்ச்சியடைய செய்யும் வகையில் இருக்கும்.

ஏனென்றால் இந்த கண்காட்சியில் ஏராளமான புதிய தொழில்நுட்பங்களை கொண்ட நிறுவனங்கள் பல காட்சிப்படுத்தி உள்ளது. அனைத்து எந்திரங்களையும் பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது.

போட்டி நாடுகளில் உள்ள தொழில்நுட்பங்கள் திருப்பூருக்கே வந்தது போல் உள்ளது. தற்போது உள்ள வர்த்தக போட்டியில் நவீன எந்திரங்கள் மூலம் ஆடை வடிவமைப்பு மற்றும் செலவுகளை குறைப்பது, உற்பத்தியை அதிகரிக்கவே அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். இதற்கு இந்த கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும்.

திருப்பூர் தொழில்துறையினரின் கனவான ரூ.1 லட்சம் கோடி வர்த்தக இலக்கை வருகிற 2022–ம் ஆண்டு அடைவதற்கு இந்த நிட்டெக் கண்காட்சி முக்கிய பங்கு வகிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்