தாராபுரம் பகுதியில் போலி விதை உற்பத்தி நிறுவனங்களை மூடவேண்டும் கருகிய நெற்பயிருடன் வந்து விவசாயிகள் முறையீடு
தாராபுரம் பகுதியில் போலி விதை உற்பத்தி நிறுவனங்களை மூட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருகிய நெற்பயிருடன் வந்து கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு, இணை இயக்குனர்(வேளாண்மை) வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) அரசப்பன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மனுக்கள் அளித்து பேசினார்கள். அதன் விவரம் வருமாறு:–
ஈஸ்வரமூர்த்தி(உழவர் உழைப்பாளர் கட்சி):–
தாராபுரம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் அமராவதி பாசனம் மூலமாக நெல் சாகுபடி அதிகம் நடந்துள்ளது. நெல் அறுவடை பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. நெல் கொள்முதல் செய்ய வசதியாக அலங்கியம், சத்திரம், தேவநல்லூர், மடத்துக்குளம் ஆகிய இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்கி கொள்முதல் செய்து வருகிறது.
கடந்த 2 நாட்கள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் ஏராளமான விவசாயிகள் நெல்லை கொண்டு வந்து காத்திருக்கிறார்கள். நெல் தரக்கட்டுப்பாடு அதிகாரி பல்வேறு நிபந்தனைகளை விதித்து கொள்முதல் செய்வதை தடுத்து வருகிறார். விவசாயிகளை தரக்குறைவாக பேசி வருகிறார். விவசாயிகளை மதிப்பதில்லை. கொள்முதலில் பல்வேறு குளறுபடிகளை செய்து வருகிறார். 1 ஏக்கரில் பயிரிட்டுள்ள விவசாயி 60 மூடை தான் கொண்டு வர வேண்டும் என்று கூறுகிறார்கள். அலங்கியம் பகுதியில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் வருகிற 4–ந் தேதி விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர் என்றார்.
கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பேசும்போது, விவசாயிகள் அதிகமாக நெல் கொண்டு வந்தால் அதை கொள்முதல் செய்வதற்கான வசதி செய்து கொடுக்கப்படும் என்றார்.
காளிமுத்து (தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்):–
தாராபுரம் பகுதியில் 54 விதை நெல் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இங்கிருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நெல் விதை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2017–18–ம் ஆண்டு டெல்டா பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யும் விதை நெல்லை வாங்கி பயிர் செய்தனர். நாகை மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் பயிர் பாதிப்படைந்து முற்றிலும் கருகியது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட விதை நெல் உற்பத்தி நிறுவனங்களில் விதை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். 11 விதை உற்பத்தி நிறுவனத்தினர் விதை நெல்லை விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் தாராபுரம் அமராவதி பகுதி நெல் விவசாயிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தாராபுரத்தில் உள்ள ஒரு விதை நெல் உற்பத்தி நிறுவனத்தில் நெல் வாங்கி 200 ஏக்கரில் பயிர் செய்தனர். அந்த நெற்பயிர்கள் முற்றிலும் கருகிவிட்டது. இதுதொடர்பாக தாராபுரம் சப்–கலெக்டர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
எனவே போலி விதை நெல் உற்பத்தி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்தும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், விதை உற்பத்தி நிறுவனங்களுக்கு துணை நிற்கும் விதை ஆய்வாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதே கோரிக்கையை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும் பேசினார்கள். அப்போது கருகிய நெற்பயிரை கொண்டு வந்து கூட்டத்தில் கலெக்டரிடம் காண்பித்து பேசினார்கள்.
இதற்கு வேளாண் இணை இயக்குனர் வளர்மதி பதில் அளித்து பேசும்போது, இந்த புகார் தொடர்பாக வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். பருவநிலை மாற்றம் காரணமாக இவ்வாறு நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கொங்கு ராஜாமணி(தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்):–
காங்கேயம் தாலுகா ஊடையம் கிராமம் வட்டாரங்காடு காலனி அருகே தனியார் கிரஷர் நிறுவனம் உள்ளது. இங்கு கல் உடைப்பதால் ஏற்படும் புகை குடியிருப்பு பகுதியில் பரவுகிறது. இதனால் சுவாச கோளாறால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். விளைநிலங்களில் பாறைப்பொடி விழுகிறது. இதனால் விளைபொருட்கள் சரிவர விளைவது இல்லை. கால்நடைகளும் பாதிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள இந்த கிரஷர் நிறுவனத்தை மூட வேண்டும் என்று கூறியுள்ளார்.