விவசாயத்தில் நஷ்டம் எதிரொலி, முல்லைப்பெரியாற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் இளம்பெண் முல்லைப்பெரியாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுவதாவது:-

Update: 2019-03-01 22:45 GMT
கூடலூர்,

தேனி மாவட்டம், கூடலூர் 17-வது வார்டு, முத்தையர் தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன். விவசாயி. இவரது மனைவி கொடியம்மாள் (வயது 35). 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தனர். கடந்த 4 வருடங்களாக இவர்களுக்கு விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் கடந்த சில மாதங்களாக கொடியம்மாள் மன உளைச்சலுடன் காணப்பட்டார்.

இந்நிலையில் நேற்று காலை தனது தோட்டத்திற்கு வேலை செய்யபோவதாக கூறிவிட்டு வந்த கொடியம்மாள் காஞ்சிமரத்துறை அருகே உள்ள முல்லைப்பெரியாற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை அக்கம்பக்கத்தினர் பார்த்து ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர். எனினும் அவர்களால் காப்பாற்ற இயலவில்லை. இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கம்பம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் வர காலதாமதம் ஏற்பட்டதால் பொதுமக்களே ஆற்றில் குதித்து தேடினர். பின்னர் சிறிது நேரத்திற்கு பின் அவர்கள் கொடியம்மாளை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடல் கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்