ஆட்டோ மீது பஸ் மோதியதில் பாட்டி, பச்சிளங்குழந்தை பலி கந்திகுப்பம் அருகே பரிதாபம்

கந்திகுப்பம் அருகே ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் பாட்டியும், பச்சிளங்குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2019-03-01 22:00 GMT
பர்கூர், 

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள குருவிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஜெயா (வயது 50). இவர்களின் மகள் நாயகி (28). இவரது கணவர் சென்ன கவுண்டன். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு இனியாஸ்ரீ (6) என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 9 நாட்களுக்கு முன்பு நாயகிக்கு 2-வது பெண் குழந்தை பிறந்தது. நேற்று காலை ஜெயா தனது மகள் நாயகி, பேத்திகள் இனியாஸ்ரீ மற்றும் 9 நாள் ஆன பச்சிளங்குழந்தை ஆகியோருடன் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அந்த ஆட்டோவை குருவிநாயனப்பள்ளியை சேர்ந்த ரபீக் என்பவர் ஓட்டினார்.


ஆட்டோ கந்திகுப்பம் அருகே கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் பசவன்ன கோவில் பக்கமாக வந்து கொண்டிருந்தது. அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் நோக்கி சென்ற அரசு பஸ், ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் ஆட்டோவில் இருந்த ஜெயா மற்றும் பிறந்து 9 நாளே ஆன பெண் குழந்தை ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நாயகி, அவரது மகள் இனியாஸ்ரீ, ஆட்டோ டிரைவர் ரபீக் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்றனர். அவர்கள் இறந்த ஜெயா மற்றும் பச்சிளங்குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான ஆட்டோ மற்றும் பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் பாட்டி, பச்சிளங்குழந்தை பலியான சம்பவம் குருவிநாயனப்பள்ளி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்