பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்

பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-01 23:15 GMT

ஈரோடு,

வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் வருவாய்த்துறை ஊழியர்களை வெளிமாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. அதன்படி வருவாய்த்துறை ஊழியர்கள் பலர் பணியை புறக்கணித்துவிட்டு ஈரோடு கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அவர்களுடைய போராட்டம் 2–வது நாளாக நேற்றும் தொடங்கியது. ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருவாய்த்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்துவிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு தாலுகா அலுவலகத்தில் நடந்த போராட்டத்துக்கு சங்க மாவட்ட பொருளாளர் விஜய் தலைமை தாங்கினார். இதில் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து வருவாய்த்துறை ஊழியர்கள் கூறும்போது, ‘‘நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி தாசில்தார் உள்பட வருவாய்த்துறை உதவியாளர்கள் வரை வெளிமாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை தேர்தல் பணிக்காலத்தில் அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது பெண்கள் என்றும் பாராமல் வெளிமாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்’’, என்றனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களிலும் வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்