பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை நிர்ணயம் செய்யக்கோரி - ஊட்டியில் விவசாயிகள் உண்ணாவிரதம்
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை நிர்ணயம் செய்யக்கோரி ஊட்டியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் சங்கம் சார்பில் பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.30 விலை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், தேயிலை விவசாயிகளின் குழந்தைகள் கல்விக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது.
போராட்டத்துக்கு சங்க தலைவர் ஜே.பி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். நீலகிரி விவசாயிகள் சங்க தலைவர் பெள்ளி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஆல்தொரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரத போராட்டத்தை படுகர் சமுதாய முன்னாள் தலைவர் அய்யாரு தொடங்கி வைத்தார். போராட்டத்தில் ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 குறைந்தபட்ச விலையாக நிர்ணயம் செய்யவும், மலை மாவட்டத்தை கருத்தில் கொண்டு விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பேச உள்ளேன். மேலும் தேயிலை வாரியம் மூலம் விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து தெரிவிக்க உள்ளேன். தேயிலைத்தூள் ஏலம் எடுக்கும் ஏஜெண்டுகள் கிலோ ஒன்றுக்கு ரூ.200-க்கு மேல் ஏலம் எடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தை தேயிலை வாரியம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் முபாரக், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் பத்ரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள். போராட்டத்தில் சிறு, குறு தேயிலை விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.