மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 32 ஆயிரத்து 329 பேர் எழுதினர்
திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 32 ஆயிரத்து 329 பேர் எழுதினர்.
திருச்சி,
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தமிழ்பாடத்துடன் தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத 116 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 85 அரசு பள்ளிகள், 14 ஆதிதிராவிடர் நல பள்ளிகள், 71 அரசு உதவி பெறும் பள்ளிகள், 76 மெட்ரிக் மற்றும் சுயநிதிப்பள்ளிகள் மற்றும் ஒரு மாநகராட்சி பள்ளி என மொத்தம் 247 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர்.
தேர்வை எழுதுவதற்காக மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு நேற்று காலையிலேயே வந்தனர். வீடுகளில் தங்களது குழந்தைகளை பெற்றோர் வாழ்த்தி அனுப்பி வைத்தனர். தேர்வுமையங்களுக்கு வருவதற்கு முன்பு மாணவ- மாணவிகள் வழிபாடு செய்தனர்.
தேர்வு தொடங்குவதற்கு முன்பு வரை மாணவ-மாணவிகள் ஆங்காங்கே அமர்ந்து படித்து கொண்டிருந்தனர். மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைத்தனர். மேலும் மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
தேர்வு மையத்திற்குள் மாணவ-மாணவிகள் செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பலத்த சோதனைக்கு பின் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவிகள் தலையில் வைத்திருந்த பூக்களும் சோதனையின் போது, அகற்றப்பட்டது. தேர்வுக்கான வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு எடுத்துவரப்பட்டன. தேர்வு மையத்திற்குள் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடிவடைந்தது.
திருச்சி மாவட்டத்தில் தமிழ்பாட தேர்வை மொத்தம் 34 ஆயிரத்து 174 பேரில் 32 ஆயிரத்து 329 பேர் எழுதினர். 1,845 பேர் தேர்வு எழுதவரவில்லை. தேர்வு பகல் 12.45 மணிக்கு முடிவடைந்தது. மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தமிழ்ப்பாடம் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். தேர்வு மையங்களில் 116 முதன்மை கண்காணிப்பாளர்கள், 116 துறை அலுவலர்கள், 18 கூடுதல் துறை அலுவலர்கள், 1,900 அறை கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிளஸ்-2 பழைய முறையிலான பொதுத்தேர்வினை முசிறி கல்வி மாவட்டத்தில் வெள்ளூர் அரசு உயர்நிலைப்பள்ளி மையத்திலும், திருச்சி கல்வி மாவட்டத்தில் திருச்சி செல்வ தாமோதரன் மேல்நிலைப்பள்ளி மையத்திலும் எழுதினர்.
அம்மை நோய் தாக்கிய மாணவி ஒருவருக்கு சேவா சங்கம் பள்ளியில் தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. மாணவியை அவரது தாய் அழைத்து வந்திருந்தார். தேர்வு எழுதிய போது அவரது அருகில் வேப்பிலை வைத்திருந்தார்.
தேர்வில் முறைகேடுகள் நடைபெறா வண்ணம் 270 நிலையான கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி வெஸ்ட்ரி பள்ளி தேர்வு மையத்தில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதை கலெக்டர் சிவராசு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் உடன் இருந்தார். வருகிற 4-ந்தேதி ஆங்கில பாடத்தேர்வு நடைபெற உள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 19-ந்தேதி முடிவடைகிறது.