வாலிபரை கொலை செய்த கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் வேலூர் கோர்ட்டு தீர்ப்பு
வாலிபரை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வேலூர்,
குடியாத்தம் தாலுகா தாழையாத்தம் பகுதி பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் 14.1.2017 அன்று மாலை 5 மணி அளவில் தாயம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த சுகுமார் (30) என்பவர் அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் சென்றார். அவருக்கும் தாயம் விளையாடிய ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து சுகுமார் சென்று விட்டார். பின்னர் இரவு 8 மணி அளவில் சுகுமாரை தேடி அவரது வீட்டிற்கு ராஜா சென்றார். அங்கு அவர் இல்லை. அருகில் இருந்த சீனிவாசன் என்பவர் வீட்டில் சுகுமார் இருந்துள்ளார். அங்கு சென்ற ராஜா, சுகுமாரை திடீரென தாக்கினார்.
தடுக்க வந்த சீனிவாசனையும் அவர் கீழே பிடித்து தள்ளிவிட்டார். இந்த தாக்குதலில் சுகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நடந்த வழக்கின் இறுதி விசாரணையின்போது அரசு தரப்பில் வக்கீல் அ.கோ.அண்ணாமலை ஆஜராகி வாதாடினார். நீதிபதி எஸ்.குணசேகரன் வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறினார்.
அதில், குற்றம் சாட்டப்பட்ட ராஜாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் 1 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பலத்த காவலுடன் ராஜாவை போலீசார் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர்.