நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதுவை மாநிலத்தில் நலத்திட்டங்கள் தடையின்றி செயல்படுத்தப்படும் அமைச்சர் கந்தசாமி பேச்சு

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மத்தியில் பிரதமராக ராகுல் காந்தி வருவார். அதன் பிறகு புதுவை மாநிலத்தில் நலத்திட்டங்கள் தடையின்றி செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

Update: 2019-03-01 00:11 GMT
பாகூர்.

ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரைநிலை கழகம் சார்பில் ஏம்பலம் தொகுதி அரங்கனூர்-நிர்ணயப்பட்டு கிராமத்தில் புதிதாக சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. அதற்கான திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். பாட்கோ செயற்பொறியாளர் ஏகாம்பரம் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக ராதாகிருஷ்ணன் எம்.பி. கலந்து கொண்டு சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து பனித்திட்டு -ஆலடிமேடு கிராமத்தில் நவீன சமுதாய நலக்கூடம் மற்றும் கலை அரங்க திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

பின்னர் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 70 பயனாளிகளுக்கு முதல், 2-வது, 3-வது தவணை தொகைகளையும், 39 கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதி உதவியாக ரூ.4 லட்சத்து 68 ஆயிரமும் திருமண உதவித் தொகையாக 16 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சமும் அமைச்சர் கந்தசாமி வழங்கினார். மேலும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் 115 அங்கன்வாடி மையங்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கூட்டு உதவியுடன் எரிவாயு இணைப்பு மற்றும் எரிவாயு அடுப்புகளும், பெண்களுக்கு கறவை மாடு வாங்க கடன் உதவியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் திட்டங்களை செயல்படுத்த நிதியை பெற முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அனைவரும் போராட வேண்டிய நிலை உள்ளது. மக்களுக்கு சேவை செய்ய இரவு தூக்கத்தை குறைத்து கொண்டு பணியாற்றிவருகிறோம். ஆனால் அரசு அதிகாரிகளில் பலர் மக்களுக்கு வேண்டிய திட்டங்களை செயல்படுத்துவது கிடையாது.

கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் கிருமாம்பாக்கம் சாய்பாபா கோயில் அருகில் உண்மையான பயனாளிகளுக்கு மனைப்பட்டா வழங்காமல், அரசு வேலையில் உள்ளவர்களுக்கும் தமிழக மாநிலத்தை சேரந்தவர்களுக்கும், ஒரே வீட்டில் 2 பேருக்கும் வழங்கினார்கள். இது தொடர்பாக கவர்னருக்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்ததில் கடந்த ஆட்சியில் ஏம்பலம் தொகுதியில் 290 பட்டாக்கள் உண்மையான பயனாளிக்கு வழங்கவில்லை என கூறி வழங்கிய மனைப்பட்டாவை ரத்து செய்ய கவர்னர் உத்தரவிட்டார்.

நான் ஆட்சியில் இருக்கும்போது பலதிட்டங்களை கொண்டு வந்துள்ளேன். அதுபோல் இந்த தொகுதியை சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ராஜவேலு என்ன திட்டங்களை கொண்டு வந்தார் என பட்டியலிட முடியுமா?

மத்தியில் ராகுல் காந்தி பிரதமாராக வருவார். அதுவரை காத்திருங்கள், அதன் பிறகு புதுச்சேரி மாநிலத்தில் பல திட்டங்கள் தடையின்றி செயல்படுத்துவோம், வேலைவாய்ப்பும் அதிகரிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை துணை இயக்குனர் கனகராஜ், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஷ்வந்தையா, ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக உதவி பொறியாளர் சாம்பசிவம், இளநிலை பொறியாளர் முகுந்தன், ஏம்பலம் தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் சாமிதுரை, தெற்கு மாவட்ட பொருளாளர் குமரேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்