பாலியல் தொல்லைக்கு ஆளான 3 மாத குழந்தையின் தந்தை தற்கொலை

பாலியல் தொல்லைக்கு ஆளான 3 மாத குழந்தையின் தந்தை திரிபுராவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Update: 2019-02-28 22:00 GMT
வேலூர்,

திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 3 மாத குழந்தையை சிகிச்சைக்காக பெற்றோர் 4 மாதங்களுக்கு முன்பு வேலூருக்கு கொண்டு வந்திருந்தனர். தனியார் மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்தபோது குழந்தை பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து குழந்தையின் பெற்றோரிடம், குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

ஆனால் அவர்கள் சரியாக பதில் கூறவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி வழக்குப்பதிவு செய்து குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார். ஆனால் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில்கூறினர்.

அதைத்தொடர்ந்து குழந்தையை காட்பாடியில் உள்ள ஒரு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தையின் பெற்றோர் திரிபுராவுக்கு சென்றுவிட்டனர். அவர்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் திரிபுரா போலீசில் புகார் செய்தனர். அதில் தங்கள் குழந்தையை மீட்டுத்தாருங்கள் என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு ஆளான 3 மாத குழந்தையின் தந்தை கடந்தசில நாட்களுக்கு முன்பு திரிபுராவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே குழந்தையின் பாலியல் தொல்லைக்கும், தந்தைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? அல்லது வேறு ஏதாவது காரணத்தினால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்