பாகிஸ்தானுக்கு ராணுவம் பதிலடி கொடுத்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கவில்லை எடியூரப்பா விளக்கம்
பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கவில்லை என்று எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.
யாதகிரி,
கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா நேற்று முன்தினம் சித்ரதுர்காவில் நிருபர்களிடம் கூறுகையில், ‘துணை ராணுவப்படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய விமானப்படை குண்டுகளை வீசி தாக்கி அழித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தான் கூறியபடி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் அலை மீண்டும் வீசத் தொடங்கி உள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 22 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி,’ என்று கூறி இருந்தார்.
எடியூரப்பாவின் இந்த பேச்சுக்கு முதல்-மந்திரி குமாரசாமி உள்பட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பா.ஜனதா மேலிட தலைவர்களும் எடியூரப்பாவை தொடர்பு கொண்டு, இதுபோன்று சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியதை கண்டித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தான் பேசியது குறித்து நேற்று தனது டுவிட்டரில் எடியூரப்பா கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
என்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழல் பா.ஜனதாவுக்கு சாதகமாக இருப்பதாகவும், பிரதமர் மோடி தலைமையில் கர்நாடகத்தில் குறைந்த பட்சம் 22 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்பதையும் கடந்த 2 மாதங்களாக கூறி வருகிறேன். 22 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்பதை முதன் முதலாக நான் கூறவில்லை.
இவ்வாறு எடியூரப்பா கூறியுள்ளார்.
இந்த விவகாரம் பற்றி யாதகிரியில் நேற்று எடியூரப்பா நிருபர்களிடம் கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்திருக்கும் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கவில்லை. ராணுவம் பதிலடி கொடுத்திருப்பதை பயன்படுத்தி தேர்தலில் ஆதாயம் தேடும் பிரச்சினைக்கே இடமில்லை. இந்திய ராணுவத்தை 135 கோடி மக்களும் கொண்டாடி வருகின்றனர்,’ என்றார்.