தேஜஸ் ரெயில் இன்று மதியம் 2 மணிக்கு இயக்கப்படுகிறது, மதுரையில் இருந்து சென்னைக்கு

மதுரையில் இருந்து சென்னைக்கு அதிநவீன சொகுசு தேஜஸ் ரெயில் இன்று மதியம் 2 மணிக்கு இயக்கப்பட உள்ளது. இதற்குரிய கட்டண விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2019-02-28 23:53 GMT
மதுரை, 

மதுரையில் இருந்து சென்னைக்கு முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை கொண்ட அதிநவீன தேஜஸ் ரெயில் இன்று(வெள்ளிக்கிழமை) இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலை, அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கன்னியாகுமரி வருகை தரும் பிரதமர் நரேந்திரமோடி காணொளி காட்சி மூலம் மதியம் 2 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இதற்காக மதுரை ரெயில் நிலையத்தின் 1-வது பிளாட்பாரத்தில் மேடை மற்றும் காணொலி திரை அமைக்கும் பணிகள் நடந்தன. இதற்கான பணிகளை மதுரை ரெயில் நிலையத்தின் இயக்குனர் வீரேந்திரகுமார் மற்றும் கோட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் முகைதீன் தலைமையிலான போலீசார் செய்து வருகின்றனர்.

தேஜஸ் ரெயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு கேமரா, தீயணைப்புக்கருவிகள், தீ தடுப்பு அலாரம், தானாக மூடித்திறக்கும் கதவுகள், சொகுசு இருக்கைகள், நவீன கழிப்பறைகள், இருக்கையில் எல்.இ.டி. திரை வசதி, காலை உணவு, இரவு உணவு, டீ, பிஸ்கெட் ஆகிய வசதிகள் உள்ளன.

இந்த ரெயில் மதுரையில் இருந்து சென்னை செல்லும் வழியில் கொடைரோடு மற்றும் திருச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். மதுரை கோட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு மதுரையில் இருந்து சென்னை வரை டிக்கெட் பரிசோதனை செய்யும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தினமும் மாலை 3 மணிக்கு தேஜஸ் ரெயில் இயக்கப்படும். ஆனால், இன்று ஒரு நாள் மட்டும் மதியம் 2 மணிக்கு புறப்படும். வியாழக்கிழமை தவிர பிறநாட்களில் தேஜஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது.

மதுரையில் இருந்து சென்னைக்கு ‘எக்சிகியூடிவ்’ வகுப்புக்கு ரூ.2,295, சேர்கார் இருக்கை வகுப்புக்கு ரூ.1,195 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும். மதுரையில் இருந்து திருச்சிக்கு முறையே ரூ.1,080 மற்றும் ரூ.535 கட்டணமாகவும், கொடைரோட்டுக்கு ரூ.650 மற்றும் ரூ.325 கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு எக்சிகியூடிவ் வகுப்புக்கு ரூ.1,655 மற்றும் சேர்கார் இருக்கை வகுப்புக்கு ரூ.830 கட்டணமாகவும், கொடைரோட்டுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.980 கட்டணமாகவும், மதுரைக்கு ரூ.2,110 மற்றும் ரூ.1,035 கட்டணமாகவும் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் ஜி.எஸ்.டி. மற்றும் உணவுக்கும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. உணவு வழங்க வேண்டாம் என்றால் மதுரையில் இருந்து புறப்படும் ரெயிலுக்கு ரூ.1,940 மற்றும் ரூ.895 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்