வருவாய்த்துறை ஊழியர்கள் திடீர் பணி புறக்கணிப்பு போராட்டம்

குமரி மாவட்டத்தில் நேற்று வருவாய்த்துறை ஊழியர்கள் திடீரென தங்களது பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

Update: 2019-02-28 22:45 GMT
நாகர்கோவில், 

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேர்தல் பணிக்காக ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறார்கள். குமரி மாவட்டத்திலும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தாசில்தார்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த உத்தரவுக்கு வருவாய்த்துறை ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குமரி மாவட்ட வருவாய்த்துறை ஊழியர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்களது எதிர்ப்பை காட்டும் விதமாக குமரி மாவட்டத்தில் நேற்று வருவாய்த்துறை ஊழியர்கள் அனைவரும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு மற்றும் கல்குளம் ஆகிய தாசில்தார் அலுவலக ஊழியர்கள் மற்றும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் வருவாய்த்துறை அலுவலக ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அதாவது காலையில் வழக்கம் போல பணிக்கு வந்த ஊழியர்கள் 11 மணிக்கு மேல் திடீரென பணிகளை அப்படியே போட்டுவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வருவாய்த்துறை அலுவலகம் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

பின்னர் அனைவரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள டீ கடை முன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோலப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி வருவாய்த்துறை ஊழியர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் தாசில்தார்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்கி அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், கல்குளம், தோவாளை மற்றும் விளவங்கோடு ஆகிய 4 தாலுகா தாசில்தார்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ள 11 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைவான காலமே இருக்கும் இந்த நேரத்தில் தாசில்தார்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்கினால் தேர்தல் பணி செய்வது மிகக்கடினம். ஏன் எனில் இடமாறுதல் பெற்றுள்ள தாசில்தார்கள் தாங்கள் செல்லும் புதிய ஊரை பற்றிய தெரிந்து கொள்ளவே 2 மாதங்கள் வரை ஆகும். அப்படி இருக்க எப்படி தேர்தல் பணி செய்ய முடியும்? எனவே தாசில்தார்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றாமல் தாங்கள் ஏற்கனவே பணி செய்கின்ற மாவட்டத்துக்குள்ளேயே மாறுதல் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் அனைத்து வருவாய்த்துறை ஊழியர்களும் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு பிறகு அனைத்து ஊழியர்களும் வழக்கம் போல பணிக்கு திரும்பினர்.

மேலும் செய்திகள்