தொழிலாளியை கொலை செய்ய முயன்ற வழக்கில் போலி டாக்டருக்கு 5 ஆண்டு சிறை ஓமலூர் கோர்ட்டு தீர்ப்பு
தொழிலாளியை கொலை செய்ய முயன்ற வழக்கில் போலி டாக்டருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஓமலூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஓமலூர்,
ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). இவருக்கும், டேனிஷ்பேட்டை பெரிய வடகம்பட்டியை சேர்ந்த தொழிலாளி மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் மணிகண்டனை, முருகேசன் தாக்கி, கொலை செய்ய முயன்றார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகேசனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஓமலூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தயாநிதி நேற்று தீர்ப்பளித்தார். இதில், குற்றம் சாட்டப்பட்ட முருகேசனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் முருகேசனை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் வைரவேல் ஆஜரானார். சிறையில் அடைக்கப்பட்ட முருகேசன் ஏற்கனவே போலி டாக்டராக இருந்து மருத்துவம் பார்த்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் குறிப்பிடத்தக்கது.