முசிறியில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.21 கோடியில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் தொடக்கம்

முசிறியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, ரூ.21 கோடி மதிப்பில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.;

Update: 2019-02-28 22:30 GMT
முசிறி, 

முசிறி பேரூராட்சி பகுதி மக்களுக்கு காவிரி ஆற்றில் இரண்டு இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2013-ம் ஆண்டு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்தது. இதனால் முசிறி பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக முசிறிக்கு வந்த அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, குடிநீர் பிரச்சினையை போக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்து புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி அவர், ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 2016-ம் ஆண்டு ஜெயலலிதா பங்கேற்ற இறுதி விழாவில், காணொலி காட்சி மூலம் இந்த திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. முசிறியை அடுத்த செவந்தலிங்கபுரம் கிராமத்தில் உள்ள காவிரி ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.21 கோடியே 7 லட்சம் மதிப்பில் புதிதாக ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து குழாய்கள் மூலம் முசிறி நகர மக்களுக்கு குடிநீர் வழங்க பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார்.இதையடுத்து முசிறி தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ், செவந்தலிங்கபுரம் நீரேற்றும் நிலையத்தில் மின்மோட்டார்களை இயக்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார். இதில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஜோதிமணி, உதவி நிர்வாக பொறியாளர் எழிலரசன், பேரூராட்சி செயல் அலுவலர் தேவதாஸ் மற்றும் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்