நெல்லை அருகே கார்-லாரி மோதல்: கணவன்-மனைவி பலி; மகள், உறவினருக்கு தீவிர சிகிச்சை டிரைவர் கைது

நெல்லை அருகே கார்-லாரி மோதிய விபத்தில் பலியான தம்பதியின் மகள், உறவினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-02-28 22:30 GMT
நெல்லை,

பாளையங்கோட்டை தியாகராஜ நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது 45). அரசு ஒப்பந்ததாரர். இவருடைய மனைவி மைதீன் பாத்திமா (40). இவர்களுடைய மகன் பீர் முகமது (13) உடுமலைப்பேட்டை அருகே அமராவதி நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். அவனை பார்க்க முகமது இஸ்மாயில், மைதீன் பாத்திமா மற்றும் மகள் முகமது ஷபிம் மீராள் (17) ஆகியோர் ஒரு காரில் புறப்பட்டனர். அப்போது உறவினரும், மின்வாரிய ஒப்பந்ததாரருமான முஜிபுர் ரகுமான் உடன் சென்றார்.

இவர்கள் பீர் முகமதுவை சந்தித்து பேசிவிட்டு, நேற்று முன்தினம் இரவு நெல்லைக்கு புறப்பட்டனர். மதுரை -நெல்லை 4 வழிச்சாலையில் கங்கைகொண்டானை கடந்து சிப்காட் பகுதியில் வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியும், காரும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் முகமது இஸ்மாயில், பாத்திமா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மகள் முகமது ஷபிம் மீராள், முஜ்புர் ரகுமான் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் முகமது ஷபிம் மீராள் ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் பொதுத்தேர்வு எழுதும் நேரத்தில் அவரும் விபத்தில் சிக்கி இருப்பதுடன், பெற்றோரை இழந்தது குடும்பத்தினரிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளியூரை சேர்ந்த லாரி டிரைவர் கணேசன் (41) என்பவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்