ராசிபுரத்தில் ராமேசுவரம்-ஓஹா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பொதுமக்கள் வரவேற்பு அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
ராசிபுரம் வந்த ராமேசுவரம்-ஓஹா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் அந்த ரெயிலை அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ராசிபுரம்,
ராமேசுவரம்-ஓஹா எக்ஸ்பிரஸ் ரெயில் (16734) செவ்வாய்க்கிழமைதோறும் குஜராத் மாநிலம் ஓஹாவில் இருந்து புறப்பட்டு சேலம், நாமக்கல், கரூர், மதுரை வழியாக ராமேசுவரத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் ராசிபுரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை.
ராமேசுவரம்-ஓஹா எக்ஸ்பிரஸ் ரெயிலை ராசிபுரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் மத்திய ரெயில்வே துறை மந்திரி பியூஸ் கோயலிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் ராமேசுவரம்-ஓஹா எக்ஸ்பிரஸ் ரெயில் ராசிபுரம் ரெயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதையொட்டி சோதனை ஓட்டம் அடிப்படையில் நேற்று முதல் ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை செயல்படுத்தப்படும் என சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராமேசுவரம்-ஓஹா எக்ஸ்பிரஸ் ரெயில் ராசிபுரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதன் மூலம் திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், ராமேசுவரம் செல்பவர்களுக்கும், திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா, ஆனந்த், வதோதரா, அகமதாபாத் போன்ற ஊர்களுக்கு செல்பவர்களுக்கும் பயன்பெறுவார்கள்.
நேற்று ஓஹாவில் இருந்து சேலம் வழியாக காலை 11.58 மணிக்கு ராசிபுரம் ரெயில் நிலையம் வந்த ராமேசுவரம்-ஓஹா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு அமைச்சர்கள் பி.தங்கமணி மற்றும் டாக்டர் சரோஜா, பி.ஆர்.சுந்தரம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அந்த ரெயிலை ராசிபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து ராமேசுவரத்திற்கு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பிறகு ரெயிலில் நாமக்கல் ரெயில் நிலையம் வரை சென்றனர். அவர்களுடன் கட்சி பிரமுகர்களும் சென்றனர். முன்னதாக நடந்த விழாவில் ராசிபுரம் ரெயில் நிலைய அதிகாரி ராமச்சந்திரன் வரவேற்றார். சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பா ராவ் வாழ்த்தி பேசினார்.
விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசும்போது, “பி.ஆர்.சுந்தரம் எம்.பி. கேட்டுக்கொண்டதுபோல் எக்மோர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலை ராசிபுரம் வழியாக கரூர் வரை நீட்டிக்க வேண்டும். வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நாமக்கல் ரெயில் நிலையத்தில் தற்போது ஒரு நிமிடம் நின்று செல்கிறது. அந்த ரெயில் நாமக்கல்லில் 2 நிமிடம் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ரெயில்வே துறை அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்“ என்றார். சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா பேசும்போது, “தண்ணீர் வசதி உள்பட அடிப்படை வசதிகள் அனைத்தையும் ரெயில் நிலையங்களில் செய்து தர வேண்டும்“ என்றார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, ரெயில்வே கோட்ட வணிக (கமர்ஷியல்) உதவி மேலாளர் ஜாஜகான், முதுநிலை கோட்ட மேலாளர் (ஆப்ரேட்டிங்) ஹரிகுமார், ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் பாலசுப்பிரமணியன், ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ்.தலைவர் இ.கே.பொன்னுசாமி, வெண்ணந்தூர் அட்மா குழு தலைவர் வக்கீல் தாமோதரன், பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் சேதுராமன், மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கார்த்திகேயன், மாவட்ட பா.ஜ.க. பொருளாதார பிரிவு தலைவர் ஆர்.கே.மூர்த்தி, பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ் உள்பட அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. நிர்வாகிகள், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் உள்பட பல்வேறு சேவை அமைப்புகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சேலம் ரெயில்வே கோட்ட வணிக (கமிர்ஷியல்) மேலாளர் மாது நன்றி கூறினார்.