சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டில் 360 காளைகள் சீறிப்பாய்ந்தன ஊர்க்காவல்படை வீரர் உள்பட 6 பேர் காயம்
நாமக்கல் அருகே உள்ள சேந்தமங்கலத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 360 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடுகள் முட்டி தள்ளியதில் ஊர்க்காவல்படை வீரர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
சேந்தமங்கலம்,
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நேற்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் நடைபெற்றது. இதையொட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்ற அனைத்து காளைகளையும் கால்நடை பராமரிப்புத்துறையினர் பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பு மாடுபிடி வீரர்கள் அனைவரும் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார் தலைமையில் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். பின்னர் சந்திரசேகரன் எம்.எல்.ஏ. ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து கோவில் மாடுகள் வாடிவாசல் வழியாக விடப்பட்டன. பின்னர் காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து வெளியே விடப்பட்டன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சில்வர் பாத்திரங்கள், வெள்ளிக்காசு மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் ஜல்லிக்கட்டில் அடக்க முடியாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த காளைகள் மட்டுமின்றி திருச்சி, தம்மம்பட்டி மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 360 காளைகள் சீறிப்பாய்ந்தன. இவற்றை அடக்க சேந்தமங்கலம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 186 மாடுபிடி வீரர்கள் மைதானத்தில் இருந்தனர். இவர்கள் சுழற்சி முறையில் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கேயே மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். இவர்கள் மாடுகள் முட்டி காயம் அடைந்த மாடுபிடி வீரர்கள் பொட்டிரெட்டிப்பட்டி சதீஷ்குமார், தொண்டமான்பட்டி கலைச்செல்வன், காளைகளின் உரிமையாளர்கள் கெஜகோம்பை கதிர்வேல், நாரைகிணறு குப்புசாமி, பழையபாளையம் சேது மற்றும் ஊர்க்காவல் படை வீரர் பிரசன்னா ஆகிய 6 பேருக்கும் அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இந்த ஜல்லிக்கட்டை காண சேந்தமங்கலம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து இருந்தனர். இவர்கள் அவ்வப்போது கைத்தட்டி ஆரவாரம் செய்து, மாடுபிடி வீரர்களை ஊக்கப்படுத்தியவாறு இருந்தனர்.
இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். காலை 8.45 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு மதியம் 2.30 மணி அளவில் முடிந்தது. இருப்பினும் போதிய நேரம் இல்லாததால் 20-க்கும் மேற்பட்ட காளைகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் காளைகளின் உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.