அமிர்தி சிறுவன உயிரின பூங்காவில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்திய குரங்குகள் பிடிபட்டன வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
அமிர்தி சிறுவன உயிரின பூங்காவில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வந்த நூற்றுக்கணக்கான குரங்குகள் கூண்டுவைத்து பிடிக்கப்பட்டன.
வேலூர்,
வேலூரை அடுத்த அமிர்தியில் சிறுவன உயிரின பூங்கா அமைந்துள்ளது. இங்கு மான், மயில், முதலை, முள்ளம்பன்றி, நரி உள்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. ஜவ்வாதுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் இந்த சிறுவன உயிரின பூங்கா இயற்கை எழிலோடு காணப்படுகிறது. இதனால் அமிர்தி பூங்கா ஒரு சுற்றுலா தலமாக விளங்குகிறது.
வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இங்கு சென்று வருகிறார்கள். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு வனவிலங்குகள் மற்றும் பறவைகளை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு, வனவிலங்குகளில் ஒன்றான குரங்குகளால் அதிகதொல்லை இருந்து வருகிறது. பொதுமக்கள் கொண்டுவரும் உணவு வகைகள், சிறுவர்கள் வைத்திருக்கும் தின்பண்டங்களை குரங்குகள் பறித்து சென்றுவிடுகின்றன.
மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றிவந்தன. இதனால் குரங்குகளை பிடிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து குரங்குகளை பிடிக்க மாவட்ட வன அலுவலர் பார்கவதேஜா உத்தரவிட்டார். அதன்பேரில் அமிர்தி வனச்சரக அலுவலர் சரவணன் தலைமையில், கூண்டுவைத்து குரங்குகளை பிடிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கடந்த சில நாட்களாக அமிர்தி சிறுவன உயிரின பூங்காவில் கூண்டுகள் வைத்து குரங்குகள் பிடிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான குரங்குகள் பிடிபட்டன. அவற்றை வனத்துறையினர் திரும்பி வரமுடியாத வகையில் காட்டுக்குள் கொண்டுவிட்டனர்.