ரூ.2 ஆயிரம் பெற விண்ணப்பம் தராததால் ஆவடி நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் சாலை மறியல்

ரூ.2 ஆயிரம் பெற விண்ணப்பம் தராததால் ஆவடி நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2019-02-28 23:15 GMT
ஆவடி,

தமிழக அரசு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தது. இதற்காக ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆவடி நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளனர்.

நேற்று கடைசி நாள் என்பதால் மனு கொடுக்க ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆவடி நகராட்சி அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் பொதுமக்கள் சிலர், தங்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படவில்லை என்று கூறி நகராட்சி அலுவலகம் முன்பு புதிய ராணுவ சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்து கலைந்து போகும்படி செய்தனர்.

இதுகுறித்து ஆவடி நகராட்சி கமிஷனர் ஜோதிகுமார் கூறும்போது, “ரூ.2 ஆயிரம் நிதி உதவி பெற விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் மட்டுமின்றி வசதி படைத்தவர்களும் நேற்று நகராட்சி அலுவலகத்தில் குவிந்து விட்டனர். நாங்களே அலுவலகத்துக்கு உள்ளே நுழைய முடியவில்லை. மேலும் நகராட்சி மூலமாக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் தீர்ந்துவிட்டதால் ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கும்படி பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்