குளச்சல் அருகே கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

குளச்சல் அருகே கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-02-27 21:45 GMT
குளச்சல்,

குமரி மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்டவற்றை மலிவு விலையில் வாங்கி அதை கேரளாவுக்கு கார், வேன் போன்ற வாகனங்களில் கடத்தி சென்று சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

இதனை தடுப்பதற்காக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். அதேபோல் பறக்கும் படை அதிகாரிகளும் மாவட்ட எல்லை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கேரளாவுக்கு கடத்தப்படும் ரேஷன் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பறக்கும் படை தனி தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் ஆகியோர் குளச்சல் அருகே கோடிமுனை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கோடிமுனை பஸ் நிறுத்தம் அருகில் மூடைகளை தார்பாய்களால் மூடி வைத்திருந்ததை கண்டனர். உடனே, அதிகாரிகள் தார்பாயை விலக்கி சோதனை செய்தனர்.

அப்போது, அங்கு சிறு- சிறு மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் அந்த ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்து உடையார்விளையில் உள்ள அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

அதிகாரிகளின் விசாரணையில், ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்