உசிலம்பட்டி அருகே இரவில் பயங்கரம்: விதவையை காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவர் கொலை

உசிலம்பட்டி அருகே கணவனை இழந்த பெண்ணை காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார்.

Update: 2019-02-27 23:35 GMT
உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வலையபட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் குமார்-செல்வராணி தம்பதியினரின் மகன் யுகேஷ் (வயது21). செல்வராணி கருமாத்தூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இதனால் இவர்கள் குடும்பத்துடன் கருமாத்தூரில் வசித்து வருகின்றனர். யுகேஷ் உசிலம்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

யுகேசுக்கும், போத்தம்பட்டியை சேர்ந்த விதவையான இந்திரா (31) என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்திராவுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவரை யுகேஸ் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து இந்திராவின் முதல் கணவரின் தம்பி ராம்பிரபு உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில், எனது அண்ணன் மனைவியை குழந்தைகளுடன் காணவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு யுகேசை கொடூரமாக கொலை செய்து கருமாத்தூரில் உள்ள அவரின் வீட்டின் முன்பு உடலை மர்ம நபர்கள் வீசிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தன.

இது குறித்து யுகேசின் தந்தை குமார் கொடுத்த புகாரின் பேரில் செக்கானூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து யுகேசை கொலை செய்தது யார்? என்று விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்