ரஷியா சென்ற கப்பல் விபத்தில் 4 பேர் மாயம்: உரிய பதில் அளிக்காவிட்டால் வெளியுறவுத்துறை செயலாளர் ஆஜராக நேரிடும் - மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை

ரஷியா சென்ற கப்பல் விபத்தில் 4 பேர் மாயமான வழக்கில், உரிய பதில் அளிக்காவிட்டால் வெளியுறவுத்துறை செயலாளர் ஆஜராக நேரிடும் என மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2019-02-27 23:15 GMT
மதுரை,

இந்தியாவில் இருந்து கியாஸ் ஏற்றிக்கொண்டு ரஷியா சென்ற தனியார் கப்பல் கடந்த மாதம் விபத்தில் சிக்கியது. இதில் அந்த கப்பலில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செபஸ்டின், பிரிட்டோ, அவினாஷ் உள்பட 4 பேர் மாயமானார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. அவர்களை மீட்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மாயமானவர்களை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து தகவல் தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்று வெளியுறவுத்துறை சார்பில் கோரப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை மார்ச் 4-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றைய தினம் உரிய பதில் அளிக்கவில்லை என்றால் வெளியுறவுத்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். பின்னர் இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்