ஏற்காடு மலையில் காட்டுத்தீ 150 ஏக்கர் மரங்கள் எரிந்து நாசம்
ஏற்காடு மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 150 ஏக்கரில் மரங்கள் எரிந்து நாசமானது.
ஏற்காடு,
ஏற்காடு மலைப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கரமான காட்டுத்தீ பரவியது. இதையடுத்து வனத்துறையினரும், தீயணைப்பு படையினரும் இணைந்து 4 நாட்களுக்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த காட்டுத்தீயால் 2 நாட்களாக சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பிறகு வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில், ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகே மீண்டும் காட்டுத்தீப்பற்றி மரங்கள், புதர்கள் எரியத்தொடங்கின. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், ஏற்காடு வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதற்கிடையில் ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ஏராளமான மரங்கள், செடி, கொடிகள் எரிந்து நாசமாயின.
அதாவது, ஏற்காடு அடிவார பகுதியான குரும்பப்பட்டி, குண்டூர் மேற்கு எல்லைக்குட்பட்ட பன்னிக்கரடு, கணவாய்புதூர் ஆகிய பகுதிகளில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி பெரியசாமி கூறுகையில், ஏற்காடு மலையில் பிடித்த காட்டுத்தீயால் 125 ஏக்கர் முதல் 150 ஏக்கர் பரப்பளவில் இருந்த காய்ந்து சரிந்த மூங்கில்கள், பனை மரங்கள் உள்பட பல்வேறு மரங்கள், சருகுகள், செடி, கொடிகள் எரிந்து நாசமாகி உள்ளது. இந்த தீ விபத்தால் அரசுக்கு பெரிய அளவில் இழப்பு இல்லை. இருப்பினும் சேதமதிப்பு கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது காட்டுத்தீயை அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, என்றார்.
ஏற்காட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக நிலவுகிறது. இதனால் மரங்கள், செடி, கொடிகள் காய்ந்தநிலையில் காணப்படுகிறது. ஏற்காடு தலைச்சோலை, மாரமங்கலம், வேலூர், செம்மநத்தம், வெள்ளக்கடை ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அந்த கிராம பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.