பிளஸ்-2 பொதுத்தேர்வு மையங்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மையங்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று பறக்கும் படையினருக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அறிவுரை கூறினார்.
விழுப்புரம்,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 144 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 41 ஆயிரத்து 71 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்.
இந்த தேர்வின்போது மாணவர்கள் ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாத வண்ணம் இருக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் 486 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.
இவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அருள்முருகன் கலந்துகொண்டு பேசியதாவது:-
பறக்கும் படையினர் ஒரே நேரத்தில் ஒரே தேர்வு மையத்தையே தேர்ந்தெடுத்து பார்வையிடுவதை தவிர்த்து வெவ்வேறு தேர்வு மையங்களை பார்வையிட ஏதுவாக முன்கூட்டியே சீரான முறையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். தேர்வு மையங்களை பறக்கும் படையினர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக அடிக்கடி புகார்களுக்கு இடமளிக்கக்கூடிய மையங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் எந்தவொரு சூழ்நிலையிலும் விருப்பு, வெறுப்பும் இன்றி நேர்மையான முறையில் அனைவரும் பணியாற்ற வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு பணி செய்வதுடன், குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு அறைகளை ஒழுங்கீன செயலுக்கு இடமளிக்காதவாறு ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் பணியின்போது தேர்வர்கள் அச்சமுறும் வகையில் செயல்படக்கூடாது. சந்தேகத்திற்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதித்தல் போதுமானது. அனைவரையும் சோதித்தல் என்பது அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சேவியர்சந்திரகுமார், காளிதாஸ், அலுவலக கண்காணிப்பாளர் கோகுலகண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.