சேலத்தில் காணொலிக் காட்சி மூலம் 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன், டி.ஜி.பி. ஆலோசனை
காணொலிக் காட்சி மூலம் சேலம் உள்பட 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் டி.ஜி.பி. ஆலோசனை நடத்தினார்.
சேலம்,
சேலம் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் நேற்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது கொள்ளை, கொலை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். பழைய வழக்குகளில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய வேண்டும். சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விரைந்து முடிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க துரிதமாக செயல்பட வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க வேண்டும். விபத்துகளை குறைக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 7 ஆண்டுகளுக்குள் வழக்குகளை முடிக்க வேண்டும். வழக்குகளில் குற்றப்பத்திரிகைகளை காலதாமதம் செய்யாமல் விரைந்து தாக்கல் செய்யவேண்டும்.
கண்டுபிடிக்கப்படாமல் உள்ள வழக்குகள் மீண்டும் புலன்விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும். ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, காலதாமதம் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஜி.பி. அறிவுறுத்தினார். மேலும் மாவட்டங்களில் எடுக்கப்பட சட்ட ஒழுங்கு நவடிக்கைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டுகள், டி.ஜி.பி.யிடம் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தீபா கனிக்கர் (சேலம்), மகேஷ்குமார் (தர்மபுரி), பண்டி கங்காதர் (கிருஷ்ணகிரி), அருளரசு (நாமக்கல்) ஆகியோர் கலந்து கொண்டனர்.