மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது கார், 5 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடியதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், 5 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரியாநாத்ராவ் மற்றும் போலீசார் பாலகுறி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சிலர், பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சிவா (வயது 32), வெங்கடசாமி (34), அகரம் சுரேஷ் (32), பெல்லரம்பள்ளி ரமேஷ் (26), மாணிக்கம்பட்டி மகேஷ்பூபதி (28) என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3,525 மற்றும் 2 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
அஞ்செட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் அங்குள்ள விவசாய தோட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சிலர், பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த முரளி (25) சிவலிங்கபுரம் வேலு (36), தேவன்தொட்டி சாந்தகுமார் (36), சிவனாங்கர்அய்யா (40), சிக்கானந்தபுரம் கோவிந்தராஜ் (29) என்பது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 செல்போன், ரூ 20 ஆயிரத்து 470 மற்றும் ஒரு கார், 3 மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.