மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-02-27 21:45 GMT
நெல்லை,

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டை மகராஜநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் அப்பாவு தலைமை தாங்கினார். பூங்கோதை எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிறந்தநாள் விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க. அரசை இந்த கூட்டம் கண்டிக்கிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அம்பை, ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் அதிக ஓட்டுகள் பெற வேண்டும்.

வருகிற மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடை காலம் ஆகும். இந்த கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகரில் நடக்கும் தென் மண்டல மாநாட்டில் நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்