பள்ளிக்கூட வளாகத்தை மாணவர்கள் தூய்மையுடன் பராமரிக்க வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி வலியுறுத்தல்
பள்ளிக்கூட வளாகத்தை மாணவர்கள் தூய்மையுடன் பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளியில் நெல்லை ஜி.எஸ்.டி. மத்திய துணை ஆணையரகம் சமூக பொறுப்பு நிதி ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் செலவில் பள்ளி கழிப்பறை சீரமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு ஜி.எஸ்.டி. துணை ஆணையரக இணை ஆணையர் நரேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு சீரமைக்கப்பட்ட பள்ளி கழிப்பறையை திறந்து வைத்தார். மேலும் பள்ளி வளாகத்தில் தூய்மையை பராமரிக்கும் வகையில் குப்பை தொட்டிகளையும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் இதுபோன்ற கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பள்ளிகளுக்கு செய்யப்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தை மாணவ-மாணவிகள் தூய்மையுடன் பராமரிக்க வேண்டும். குப்பைகளை குப்பைகூடைகளில் போட வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் 100 சதவீதம் திறந்தவெளி மலம் கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டு அனைத்து இல்லங்களிலும், தனி நபர் இல்ல கழிப்பிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.
மேலும், மாணவ-மாணவிகள் தங்களது இல்லங்களில் கழிப்பிடம் இல்லை என்பதை தெரிவித்தால் அங்கு கழிப்பறை கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ-மாணவிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்த இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகேசன், தூத்துக்குடி ஜி.எஸ்.டி. அலுவலக ஆய்வாளர் சிவா, பள்ளி தலைமை ஆசிரியர் செந்தூர்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.