தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் விழிப்புணர்வு பணி மேற்கொள்ள வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு
தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் விழிப்புணர்வு பணி மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு, வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வாக்களிப்பது நமது முக்கிய கடமையாகும். ஒவ்வொருவரின் வாக்குதான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம்மை ஆட்சி செய்பவர்களை தீர்மானிக்கும். 123 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் நாம் ஒருவர் ஓட்டு போடவில்லை என்றால் என்ன ஆகிவிடும் என்று நினைக்கக் கூடாது. கிராமப்புறங்களைவிட நகர்புறங்களில் வாக்களிப்பவர்களின் சதவீதம் குறைவாக உள்ளது.
உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரத்தை தெரிந்து கொள்ள 1950 என்ற இலவச தொலைபேசி சேவை உள்ளது. தேர்தலில் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இத்தேர்தலில் வாக்களிக்கும் வகையில் 18 வயது முடிவடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கல்லூரி விடுதியில் உள்ளவர்கள், கல்லூரியின் அடையாள அட்டை மற்றும் முகவரியை பதிவு செய்து வாக்காளர் அடையாள அட்டை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கல்லூரி முதல்வர்கள் தங்கள் கல்லூரியில் 18 வயது முடிந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று சான்று அளிக்க வேண்டும்.
மேலும், கல்லூரிகளில் தூதுவர்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீங்கள் வாக்களித்தால்தான் உங்களது பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு பெற உரிமை பெற்றவர்களாக திகழ்வீர்கள். எனவே ஓட்டு போடுவதன் அவசியத்தை அனைவருக்கும் எடுத்துக்கூறி தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, கல்லூரி துணை முதல்வர் ராஜவேல்முருகன், கல்வி அலுவலர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.