ஸ்ரீவைகுண்டத்தில் லாரி மோதி பெண் உடல் நசுங்கி பலி கணவர் கண் எதிரே பரிதாபம்

ஸ்ரீவைகுண்டத்தில் கணவர் கண் எதிரே லாரி மோதி பெண் உடல் நசுங்கி பலியானார்.

Update: 2019-02-27 22:30 GMT
ஸ்ரீவைகுண்டம்,

நெல்லை பாளையங்கோட்டை விநாயகர் தெருவில் வசிப்பவர் ஜிந்தா மதார். இவர் அப்பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அனிஷ் மும்தாஜ் (வயது 45). இவர்களுக்கு அனிஷ் (18), தனிஷ் (16) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அனிஷ், நெல்லையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியிலும், தனிஷ் பிளஸ்-1 வகுப்பும் படித்து வருகின்றனர்.

ஜிந்தா மதாரின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரத்தில் நேற்று உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இதையடுத்து ஜிந்தா மதார் தன்னுடைய மனைவியுடன் மொபட்டில் பேட்மாநகரத்துக்கு புறப்பட்டு சென்றார்.

பேட்மாநகரத்தில் உறவினரின் துக்க வீட்டுக்கு சென்ற பின்னர், மாலையில் ஜிந்தா மதார் தன்னுடைய மனைவியுடன் பாளையங்கோட்டைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் அருகில் சென்றபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட்டின் மீது மோதியது.

இதில் சாலையில் விழுந்த அனிஷ் மும்தாஜின் மீது லாரியின் பின்பக்க டயர் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தனது கண் எதிரே மனைவி இறந்ததை பார்த்த ஜிந்தா மதார் கதறி அழுதார். உடனே லாரியை நிறுத்தி விட்டு, டிரைவரும், கிளனரும் தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த அனிஷ் மும்தாஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான ஸ்ரீவைகுண்டம் தெற்கு யாதவர் தெருவைச் சேர்ந்த நடராஜனை (48) வலைவீசி தேடி வருகின்றனர். நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரிசி மூட்டைகளை ஏற்றிய லாரி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அவற்றை வினியோகம் செய்ய சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. கணவர் கண் எதிரே லாரி மோதி பெண் உடல் நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்