நொய்யல் அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி

நொய்யல் அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2019-02-27 22:00 GMT
நொய்யல்,

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள முனிநாதபுரத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, அதிலிருந்து அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மரவாபாளையம் காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீர் ஏற்றப்பட்டு வந்தது.இந்நிலையில் சில காரணங்களால் கடந்த 10 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் பொதுமக்களின் வேண்டுகோளின் படி முத்தனூரில் தார்சாலை ஓரத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மின்மோட்டார் பொருத்தப்பட்டு அங்கிருந்து முனிநாதபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வரை குடிநீர் குழாய் கொண்டு செல்லப்பட்டு அதன் மூலம் தொட்டியில் நீரேற்றப்பட்டுள்ளது.ஆனால் கடந்த சில நாட்களாக முனிநாதபுரம் பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்ளாட்சித் துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் அன்பழகன் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று முனிநாதபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்