ஆளுங்கட்சியினர் மதிக்காமல் செயல்பட்டால் அரசு திட்டங்களுக்கு கவர்னர் எப்படி ஒப்புதல் தருவார்? அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி

ஆளுங்கட்சியினர் கவர்னரை மதிக்காமல் செயல்பட்டால் அரசு திட்டங்களுக்கு அவர் எப்படி ஒப்புதல் தருவார்? என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி விடுத்தார்.

Update: 2019-02-27 23:45 GMT
புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை ஆளும் காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற செயலால் மாநில வளர்ச்சி, நிர்வாகம் சீர்கெட்டுப்போய் உள்ளது. சட்டமன்றத்தை கூட்டி முழு பட்ஜெட் போடுவதில் இருந்து அரசு தொடர்ந்து தவறி வருகிறது.

கடந்த நிதியாண்டில் மத்திய அரசு புதுவை மாநிலத்துக்கு ரூ.1,475 கோடி ஒதுக்கி இருந்தது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.25 கோடி, அதாவது ரூ.1,500 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுவை அரசின் அணுகுமுறை சரியில்லாததால்தான் போதிய நிதி கிடைக்கவில்லை. வழக்கமாக ஆண்டுதோறும் 10 சதவீத நிதி கூடுதலாக பெறப்படும்.

மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.4,500 கோடி. அதை வைத்தே கணக்கிட்டு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம். சட்டமன்றத்தில் விரிவான விவாதத்துக்கு விட அரசுக்கு எண்ணமில்லை. அதனால் வழக்கம்போல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.

கவர்னர் உரையை புறக்கணிப்பதற்காக ஒருநாள் கூட்டம் நடத்த உள்ளனர். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரே முடித்து வைக்கப்படாத நிலையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. கவர்னரை மதிக்காமல் செயல்பட்டால் அவர் எப்படி அரசு திட்டங்களுக்கு ஒப்புதல் தருவார்? கவர்னரும் தனது நடவடிக்கைகளை திருத்திக்கொள்வதாக தெரியவில்லை.

முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நடத்திய தர்ணா போராட்டத்தை தொடர்ந்து இலவச அரிசி திட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததாக கூறினார்கள். ஆனால் அமைச்சர் கந்தசாமி இலவச அரிசி திட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்கிறார். இந்த முரண்பாட்டை ஆட்சியாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான தனவேலு அரசு விழாவை புறக்கணித்து வெளியேறி வருகிறார். எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. தனது சுற்றுலா வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டுகிறார். முதலில் ஆட்சியாளர்கள் சொந்த கட்சியை சேர்ந்தவர்களை அடக்கவேண்டும். அதைவிட்டு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை மிரட்டக்கூடாது.

சட்டமன்றம் கூட உள்ள நிலையில் அந்த பகுதியில் போலீசார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். குறைகளை தெரிவிக்க வரும் மக்களை தடுப்பது எந்த வகையில் நியாயம்? இப்போது தடை உத்தரவு பிறப்பிக்கும் காவல்துறை முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தும்போது எங்கே போனது?

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்