அ.தி.மு.க. தலைமையிலான வலுவான கூட்டணியால் தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு

அ.தி.மு.க. தலைமையிலான வலுவான கூட்டணியால் தி.மு.க.வுக்கு தோல்வி பயம் ஏற்பட்டிருப்பதாக வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

Update: 2019-02-27 22:45 GMT
பேராவூரணி, 

முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பேராவூரணி அருகே உள்ள திருச் சிற்றம்பலம் கடைவீதியில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பேராவூரணி மா.கோவிந்தராசு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பேராவூரணி ஒன்றிய செயலாளர் துரைமாணிக்கம், பேராவூரணி முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி.திருஞானசம்பந்தம் வரவேற்று பேசினார்.

கு.பரசுராமன் எம்.பி., அ.தி.மு.க. பேச்சாளர் செல்வராஜ், பட்டுக்கோட்டை சி.வி.சேகர் எம்.எல்.ஏ., மாவட்ட மாணவரணி செயலாளர் ஆர்.காந்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் ரா.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். இந்தியாவை உலகத்தின் வல்லரசாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பவர் பிரதமர் மோடி. பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு குறித்து பொய் பிரசாரம் செய்து பாதிப்பை ஏற்படுத்தி விடலாம் என ராகுல்காந்தியும், ஸ்டாலினும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் சேர்ந்து வலுவான கூட்டணி உருவானதால் தி.மு.க.வுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. கொள்கை என்பது வேறு, விமர்சிப்பது என்பது வேறு, கூட்டணி என்பது வேறு, இது கூட தெரியாமல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் பேசி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பொன்.முத்துவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.லட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் என்.நித்தியானந்தம், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பி.சுப்பிரமணியன், திருவோணம் ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி, பேராவூரணி நகர செயலாளர் வி.என்.பக்கிரிசாமி, பெருமகளூர் நகர செயலாளர் பி.ராமமூர்த்தி, பேராவூரணி ஒன்றிய துணை செயலாளர் சிவராம சேதுபதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தவமணி மலையப்பன், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி எஸ்.வி.பி.ரவிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முடிவில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய துணை செயலாளர் எஸ்.நீலகண்டன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்