விலையில்லா சைக்கிள், மடிக்கணினி வழங்கக்கோரி அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் கொரடாச்சேரியில் நடந்தது
கொரடாச்சேரியில் விலையில்லா சைக்கிள், மடிக்கணினி வழங்கக்கோரி அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரடாச்சேரி,
தமிழக அரசு 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, விலையில்லா சைக்கிள்-மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த கல்வியாண்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், மடிக்கணினி, கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று வரவு-செலவு அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல நடப்பு கல்வியாண்டிற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் வரும் கல்வியாண்டிற்கும் தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் இக்கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பயில்கின்றனர். நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 12 மற்றும் 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ளது.
இந்தநிலையில் இதுவரை அரசு அறிவித்து போதிய நிதி ஒதுக்கப்பட்டும் விலையில்லா சைக்கிள், மடிக்கணினி வழங்கும் திட்டம் கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களை சென்றடையவில்லை. அதேபோல கல்வி உதவித்தொகையும் முறையே வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தும், விலையில்லா சைக்கிள்-மடிக்கணினி வழங்கக்கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் சிவனேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சதீஷ், ஜெயகாந்த், விக்னேஷ், கார்த்திசிவம், மனோஜ் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.