பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வை 16 ஆயிரத்து 661 பேர் எழுதுகின்றனர்
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வை 16 ஆயிரத்து 661 பேர் எழுதுகின்றனர்.
பெரம்பலூர்,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 19-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வினை எழுதுவதற்கு மாணவ, மாணவிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொது தேர்வினை 71 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 533 மாணவ, மாணவிகள் 33 தேர்வு மையங்களில் எழுதவுள்ளனர்.
இதே போல் அரியலூர் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 128 மாணவ, மாணவிகள் 30 தேர்வு மையங்களில் எழுதவுள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறையினர் செய்து வருகின்றனர். நேற்று பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வினை எழுதும் மாணவ, மாணவிகளுக்கு அனுமதி சீட்டினை (ஹால் டிக்கெட்களை) அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வழங்கினர். சில பள்ளிகளில் இன்று (வியாழக்கிழமை) வழங்கப் படவுள்ளது.
மேலும் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கொண்டு செல்வதற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 9 வழித்தட அலுவலர்களும், 43 முதன்மை கண்காணிப்பாளர்களும், 43 துறை அலுவலர்களும், மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 60 பறக்கும் படை உறுப்பினர்களும், 465 அறைக் கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல் அரியலூர் மாவட்டத்தில் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கொண்டு செல்வதற்கு 9 வழித்தட அலுவலர்களும், 52 முதன்மை கண்காணிப்பாளர்களும், 52 துறை அலுவலர்களும், 100 பறக்கும் படை உறுப்பினர்களும், 560 அறைக் கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் குறித்த நேரத்தில் பொதுத்தேர்வு எழுத ஏதுவாக போதிய பஸ் வசதி செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.