வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு 26 ஆண்டு சிறை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு
காங்கேயத்தில் வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு 26 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.;
திருப்பூர்,
திருப்பூர் காங்கேயத்தை சேர்ந்த 28 வயது கூலித்தொழிலாளி ஒருவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர். முதல் கணவருக்கு பிறந்த 2 பெண் குழந்தைகளுடன் கூலித்தொழிலாளியை 2–வது திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கு மேலும் 2 பெண் குழந்தைகள் பிறந்தன.
அந்த பெண்ணின் முதல் கணவரின் மூத்த மகளான 11 வயது சிறுமி மூலனூரில் விடுதியில் தங்கியிருந்து அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தாள். மே மாதம் கோடை விடுமுறைக்கு மட்டும் அந்த சிறுமி தனது தயாருடன் தங்கியிருந்து வந்தாள். இந்தநிலையில் கடந்த 19–5–18 அன்று அந்த சிறுமி வீட்டில் இருந்துள்ளார். அந்த கூலித்தொழிலாளி தனது வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமியின் தாயார் கூலி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். தனது மகள் சோகமாக இருப்பதை பார்த்து விவரத்தை கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுமி, தன்னை தந்தை பாலியல் தொந்தரவு செய்த விவரத்தை விளக்கினார். மேலும் கடந்த சில ஆண்டுகளாக கோடை விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தபோதெல்லாம் தன்னை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்தாள். இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக சிறுமி கூறினாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காங்கேயம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை பெற்ற போலீசார் இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் கூலித்தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, கூலித்தொழிலாளிக்கு போச்சோ சட்டப்பிரிவின் கீழ் 21 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், கொலைமிரட்டல் விடுத்த பிரிவின் கீழ் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், இந்த தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.