குடிநீர் சீராக வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி

வெள்ளித்திருப்பூரில் குடிநீர் சீராக வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-27 22:15 GMT

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூரில் 1000–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட ஆற்றுக்குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அந்தப்பகுதியில் உள்ள தோட்டங்களில் இருக்கும் கிணற்று தண்ணீர் மற்றும் ஆழ்குழாய் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர்.

இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றுக்குடிநீர் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் வெள்ளித்திருப்பூர் பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வெள்ளித்திருப்பூர் சென்னம்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வெள்ளித்திருப்பூர் போலீசார் மற்றும் செயல் அலுவலர் அங்கமுத்து, கூடுதல் வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, சாலைமறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில், ஆற்றில் இருந்து வெள்ளித்திருப்பூருக்கு வரும் குடிநீர் குழாய்கள் ஒருசில இடங்களில் உடைந்து உள்ளது. அதனால்தான் தற்போது சீராக தண்ணீர் வழங்க இயலாமல் போனது. எனவே விரைவில் குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டு, சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்