கண்டலேறு அணையில் நீர்மட்டம் குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் நிறுத்தம்
கண்டலேறு அணையில் நீர்மட்டம் குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது.
ஊத்துக்கோட்டை,
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இந்த ஏரிகளில் மொத்தம் 11.05 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
இந்த 4 ஏரிகளில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீரை திறந்து விடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் ஆந்திர அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று ஆந்திர அரசு கடந்த 7–ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டது. இந்த தண்ணீர் 152 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து கடந்த 10–ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது. 11–ந் தேதி இரவு பூண்டி ஏரியை வந்தடைந்தது.
கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு அதிகபட்சமாக 2 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட்டனர். இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு ஆரம்பத்தில் வினாடிக்கு 10 கனஅடி வீதம் வந்தது. அதன் பிறகு படிப்படியாக அதிகரித்தது. அதிகபட்சமாக வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. கண்டலேறு அணையில் 68 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
நெல்லூர் மாவட்டத்தில் பருவ மழை பொய்த்து போனதால் கண்டலேறு அணையில் நீர் இருப்பு வெகுவாக குறைந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு 7 டி.எம்.சி. தண்ணீர் தான் இருப்பு இருந்தது.
இதனை கருத்தில் கொண்டு நேற்று முன்தினம் இரவு பூண்டி ஏரிக்கு தண்ணீர் அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் தான் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியில் நீர் மட்டம் 22.90 அடியாக பதிவானது. 467 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 20 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த 11–ந் தேதி பூண்டி ஏரியின் நீர் மட்டம் 18.80 அடியாக இருந்தது. 152 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பில் இருந்தது. கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் வரத்தால் அணையில் நீர் மட்டம் 4.10 அடி உயர்ந்துள்ளது ஆறுதல் தரும் விஷயமாகும்.