வடபழனியில் ரூ.2 லட்சம் கள்ளநோட்டுகளுடன் கார் டிரைவர் கைது

வடபழனியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளுடன் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-02-27 23:00 GMT

பூந்தமல்லி,

சென்னை வடபழனி பகுதியில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் காரில் வைத்து மாற்றப்படுவதாக திட்டமிட்ட குற்ற தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அதன் துணை கண்காணிப்பாளர் குமரன் தலைமையிலான போலீசார் வடபழனி பகுதியில் மாறுவேடத்தில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக மொபட்டில் நின்று கொண்டிருந்த ஒருவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில் அவரிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது. விசாரணையில் அவை அனைத்தும் கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை வடபழனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அந்த நபரிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவர், அயனாவரம், சோலை 3–வது தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ்(வயது 32) என்பதும், கார் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரிந்தது.

கள்ள நோட்டு கும்பல் ஒன்று அவரிடம் 103 எண்ணிக்கை கொண்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நகல் எடுத்து கொடுத்து, மற்றொரு நபரிடம் கொடுத்துவிட்டு வரும்படி கூறி உள்ளனர்.

அதன்படி அந்த கள்ள நோட்டுகளை எடுத்து வந்த மோகன்ராஜ், அந்த கும்பல் கூறிய நபரிடம் கொடுப்பதற்காக அங்கு நின்று கொண்டிருந்தபோது போலீசாரிடம் சிக்கியது தெரிந்தது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகளின் மதிப்பு ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் ஆகும்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் வங்கியில் கொடுத்து சோதனை செய்ததில் அவை கள்ளநோட்டுகள்தான் என்பது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கார் டிரைவர் மோகன்ராஜை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம், அந்த கள்ளநோட்டுகளை கொடுத்து அனுப்பியது யார்?, அவரிடம் இருந்து அவற்றை வாங்க இருந்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இந்த கும்பல் கள்ள நோட்டுகளை மொத்தமாக எடுத்து வந்து சந்தையில் புழக்கத்தில் விட்டு இருப்பதும் தெரியவந்தது. வடபழனியில் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்