மனைவியை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

மனைவியை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-02-27 23:30 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூர் அம்பேத்கர்நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 57). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (50). அதே பகுதியில் சாலையோரம் டிபன் கடை வைத்து நடத்தி வந்தார். இவர்களது மகன் சதீஷ்குமார் (33). மகள் சுகந்தி (31). இந்த நிலையில் நடராஜன் சரிவர வேலைக்கு செல்லாமல் சாந்தியை அடிக்கடி மிரட்டி பணம் வாங்கி சென்று மது குடித்து வந்தார். கடந்த 23–11–2017 அன்று காலை நடராஜன் மனைவியிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டார். அதற்கு அவர் மறுத்து விட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த நடராஜன் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் சாந்தியை குத்திவிட்டு தப்பிச்சென்று விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அவரது வீட்டில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் சாந்தி பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்து அவரது மகன் சதீஷ்குமார் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக வி.ஆர்.ராம்குமார் வாதாடினார். இந்த வழக்கில் சாட்சிகளிடம் உரிய விசாரணை செய்யப்பட்டு நேற்று மாவட்ட நீதிபதி செல்வநாதன் தீர்ப்பளித்தார்.

அதில் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நடராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்