நாகையில் ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது கார் பறிமுதல்

நாகையில் நடந்த ரவுடி கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-02-27 23:15 GMT
நாகப்பட்டினம், 

நாகை அருகே உள்ள பாப்பாகோவிலை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் செந்தில்குமார் (வயது 34). பிரபல ரவுடியான இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்ளன. இவர் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன் ஏற்றும் தொழிலாளியாகவும் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் செந்தில்குமார் நாகை கோட்டைவாசல்படி நடராஜபிள்ளை தெரு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் திடீரென செந்தில்குமாரை வழிமறித்தனர். இதனால் செந்தில்குமார் தான் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அவரை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய நாகை அக்கரைக்குளம் பகுதியை சேர்ந்த முனிஸ்வரன் (39), புதிய நம்பியார் நகரை சேர்ந்த ரவிக்குமார் (23), பாப்பாக்கோவிலை சேர்ந்த சிவா (26), தஞ்சை வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த சசிக்குமார் (22), தஞ்சையை சேர்ந்த குமரேசன் (24), மணிகண்டன் (26) ஆகிய 6 பேரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலைக்கு அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்